முத்துமாரி அம்மன் உற்பத்தி மூர்த்தி விஷேடம்.
முன்னொரு காலத்தில் கைலயங்கிரி நாதனாகிய சிவபிரான் தமது பாகத்திலிருந்த பாலாம்பிகை அம்பிகையைப்பார்த்து தமது மேனியினின்றும் விபூதியை எடுத்துக்கொடுத்து இதனைக் கொண்டு உலகில் ஐந்தொழில்களையும் நிகழ்த்தி வருக என்று பணித்தார். உமாதேவியார் தம்மில் இருந்து ஏழு பேரைத் தோற்றுவித்துத் தம்பணியைத் தொடரலானார். அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட எழுவரில் ஒருவரே முத்துமாரித் தாயார் என்றுகூறப்படுகின்றது.
முத்துமாரி அம்மன் கிழவி ரூபமாக கோடிக்கரையினின்றும் வந்து வல்வையில் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருளுகின்ற மூர்த்தியாதலினால் இம் மூர்த்தியைப் பலராலும் போற்றபடுகின்ற சுயம்பு மூர்த்திக்கு ஒப்பாக போற்றுதலும் பொருத்தமாகும். அம்பாள் வலது பக்கக் கரங்களிலே வாளும் உடுக்கையும் இடது பக்கக் கரங்களிலே கபாலமும் சூலமும் பொருந்திய நான்கு கரங்களுடன் வலதுதிருப்பாதத்தைத்விட்டு இடது திருப்பாதத்தை மடித்து வீற்றிருக்கிறார். ஏந்தியவாளும்,உடுக்கையும் மனித குலத்திற்கு துன்பத்தைச் செய்கின்ற கெட்ட ஆவிகளின் வலிமையை அடக்கி அவற்றினை நிலைகுலையச் செய்யும் பேற்றினை உணர்த்தி காத்தற்றொழிலை சிறப்பாக விளக்குகின்றது. கபாலத்தை ஏந்திய கரமானது பழியைச் செய்கின்றவர்களுக்கும் இரக்கமற்ற சிந்தனையுடைய மிருகங்களைப் போன்றவர்களுக்கும் தெய்வீக சிந்தனையற்றவர்களுக்கும் திருந்தும் படியாக அவர்களின் மனதைத் திருத்தி பக்தராக்கி உருகச் செய்கின்ற திருச்செயலை உணர்த்துகின்றது மானின் பார்வையைப் போன்ற கண்கள் வருத்தமுடன் வருகின்ற அடியார்கள்பால் கருணையைச் சொரிகின்றன. தாயாரின் மருட் பார்வையானது அடங்காப்பிடாரிக ஒடுங்க அவர்களை அடக்கியே வைப்பாள் என்பதை உணர்த்துகின்றது. தாயார் எப்பொழுதும் நாகபடத்தை தனது திருமுடிமேல் சூடியிருப்பது தினமும் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சூரிய சந்திரர்களது ஒளி தமது திருமுடியின் பிரகாசத்தில் மழுங்காதிருக்க வேண்டுமென்ற கருணையினாலேயாகும்.